சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு பயணிகளை வழியனுப்புவதற்காக வருபவர்கள் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும்.கடந்த 2015-ல் 5 ரூபாயில் இருந்த பிளாட்பார டிக்கெட் விலை 10 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் தெற்கு ரெயில்வே, சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மட்டும் பிளாட்பார டிக்கெட் விலையை 3 மாதங்களுக்கு உயர்த்தியுள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-கோடை விடுமுறை நாட்களில் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந் தேதி வரை 3 மாதங்களுக்கு பிளாட்பார டிக்கெட் விலை உயர்த்தப்படுகிறது.
அதன்படி தற்போது ரூ.10 ஆக உள்ள நடைமேடை டிக்கெட் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.15-க்கு விற்கப்படும். 3 மாதம் அமலுக்கு பிறகு ஜூலை மாதம் முதல் மீண்டும் பிளாட்பார டிக்கெட் ரூ.10-க்கு விற்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.